×

வேளாண் சட்ட வாபஸ் நடவடிக்கை பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கை - அர்ஜூன் சம்பத்

 

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், “தமிழகத்தில் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிப்படைந்தோருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. 

இந்த நிலையில் வெள்ள பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசு 800 கோடி ரூபாய் தரவேண்டும் என திமுக பாராளுமன்ற குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களும் தமிழகத்திற்கு மிக நல்ல பலன்களை கொடுத்துள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வன்முறையை தூண்டி போராடி வந்தவர்களை கூட மத்திய அரசு மென்மையாக கையாண்டது. 

இந்த விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தற்போது அந்த 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பு ராஜதந்திர நடவடிக்கையாகும். அதே போல தமிழகத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்து மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். எனவே அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் திறக்க வேண்டும். 

நடிகர் விஜய் சேதுபதி தேசத்தை, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்தி பேசியதற்கு எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். அவரை தாக்கிய நபர் மீது அவர் காவல்துறையில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக நான் பேசியதற்கு என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். அதை சட்டப்படி சந்திப்பேன். இந்து மக்கள் கட்சியை பொறுத்தவரையில் வன்முறைக்கு இடம் கிடையாது. எங்களை பொறுத்தவரையில் கருத்துக்கு கருத்து என்ற கொள்கையை பின்பற்றி வருகிறோம்” என்றார்.