"தவெகவில் உழைத்தவர்களுக்கு பதவி இல்லை"- செங்கோட்டையனை முற்றுகையிட்டு வாக்குவாதம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில், ரசிகர் மன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்களுக்கு தவெக.வில் பொறுப்பு வழங்காமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அங்கு கட்சி திறப்பு விழாவிற்கு வந்த கே.ஏ.செங்கோட்டையனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெகவினர், பதாதைகளை ஏந்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சமீபத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் ரசிகர் மன்றம் முதல் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு வாய்ப்பு வழங்க கோரி அவர்கள் வெள்ளக்கோவிலில் கட்சி திறப்பு விழாவிற்கு வருகை தந்த கேஏ.செங்கோட்டையனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் உழைத்தவர்களுக்கு கட்சியில் பதவி இல்லையா இளைஞரணி பொறுப்பை பெற்று தாருங்கள் என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இது தொடர்பாக தனியாக பேசி தீர்வு காணப்படும் என அவர்களிடம் அவர் உறுதியளித்தார் எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்சி அலுவலகத்திற்குள் செல்லாமல் திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணித்து சாலையிலேயே அவர் காரின் முன்பாக நின்றனர். அவர்களிடம் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.
வெள்ளகோவில் இளைஞர் அணி நிர்வாகியாக பிரவீன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே பல ஆண்டுகளாக உழைத்து வந்த இந்த பதவியை எதிர்நோக்கி இருந்த குகன்மணி, தங்கவேல், ரகுபதி ஆகியோர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டதாக அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். ரசிகர் மன்றத்தில் இருந்து பல்வேறு பணிகளை செய்து வந்ததாகவும் தற்போதும் தவெகவில் பணிகளை திறம்பட செய்து வந்த போதிலும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.