"நள்ளிரவில் தனியாக செல்பவரா நீங்கள்?" – சென்னையில் ஐடி ஊழியரைக் கடத்தி பணம் பறித்த கொடூரம்!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் (21). இவர் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் தங்கி ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, அஜய் அண்மையில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு கடந்த 14-ஆம் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளில் விடுதிக்கு திரும்பியுள்ளார்.
விடுதிக்கு திரும்பிய போது, தனது ஹெட்ஃபோன் காணாமல் போனதை அவர் கவனித்துள்ளார். இதையடுத்து, வந்த வழியில் அது கீழே விழுந்திருக்கலாம் என நினைத்து, நள்ளிரவில் துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக ஹெட்ஃபோனை தேடிச் சென்றுள்ளார்.
பள்ளிக்கரணையின் ரேடியல் சாலையில் அவர் சென்ற போது, எதிரே தவறான பாதையில் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இதையடுத்து ஆட்டோவில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், அஜய்யை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது. தன்னிடம் பணம் இல்லை என அவர் கூறியதும், அந்த கும்பல் அஜய்யை சரமாரியாக தாக்கியுள்ளது.
பின்னர் அவரை பலவந்தமாக ஆட்டோவில் ஏற்றி, ஒவ்வொரு ஏடிஎம் சென்டர்களாக சென்று அஜய்யின் ஏடிஎம் கார்டு மூலம் அவர்கள் பணம் எடுக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால் பணம் வரவில்லை. இதையடுத்து, அவரது செல்போனையே பயன்படுத்தி 'கடன் செயலி' (Loan App) மூலம் ரூ.10,000-ஐ பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, அந்தப் பணத்தை ஏடிஎம் கார்டு மூலமாக எடுத்து, அதில் ரூ.500-ஐ மட்டும் அஜய்யிடம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.9,500-ஐ எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவரது செல்போனையும் பறித்துவிட்டு, அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று ரேடியல் சாலை ஏரிக்கரை அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அஜய் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், சம்பந்தப்பட்ட ஆட்டோ பதிவெண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியதில், வழிப்பறியில் ஈடுபட்ட அபுதாசிர் அபிப், பிரகாஷ் ராஜ், பூபாலன், சஞ்சய் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.