ஊட்டிக்கு டூர் செல்ல திட்டமா.? நாளை முதல் புது ரூல்ஸ்..!
ஊட்டிக்கு டூர் செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைவிழாவினை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் வரும் 01.05.2026 முதல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
1. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா கார்கள் அனைத்தும் காட்டேரி சந்திப்பிலிருந்து இடதுபுறமாக திரும்பி சேலாஸ், கெந்தளா, காட்டேரிடேம், கேத்தி பாலாடா, கொல்லிமலை, லவ்டேல் வந்து மஞ்சனக்கொரை, பர்ன்ஹில் வழியாக உதகை நகருக்குள் வந்தடையலாம்.
2. மேட்டுப்பாளையத்திலிருந்து கூடலூர் மற்றும் தொப்பக்காடு செல்லும் சுற்றுலா பேருந்துகள், வேன், கார்கள் மற்றும் மேக்சிகேப் வாகனங்கள் அனைத்தும் லவ்டேல் ஜங்ஷனிலிருந்து இடதுபுறமாக திரும்பி லவ்டேல் ரயில்வே ஸ்டேசன், லவ்டேல் காவல் நிலைய சந்திப்பு, காந்திநகர், மஞ்சனக்கொரை, பர்ன்ஹில், காந்தள் முக்கோணம். பிங்கர்போஸ்ட் வழியாக கூடலூர் அனுப்பிவைக்கப்படும்.
3. குன்னூரிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்து மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு சுற்றுப் பேருந்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.
4. கோத்தகிரியிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்து மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் அரசு கலைக்கல்லூரி தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு சுற்றுபேருந்தை பயன் படுத்திக் கொள்ளலாம்.
5. உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்லவேண்டும். விடுப்பட்ட ஒரு சில வாகனங்கள் வெலிங்டன் பிளாக்பிரிட்ஜ். கட்டபெட்டு மற்றும் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு திருப்பிவிடப்படும். எக்காரணத்தைக் கொண்டும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் பர்லியார் வழியாக மேட்டுப்பாளையம் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
6. கூடலூரிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்துகள் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் எச்.பி.எப். கோல்ப் சாலைப் பகுதியில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு சுற்றுப் பேருந்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.
7. கூடலூரிலிருந்து தலைக்குந்தா வந்தடையும் இலகுரக சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா மட்டம் கோழிப்பண்னை புதுமந்து வழியாக ஸ்டிபன்சர்ச் வந்தடையும்.
8. 01.05.2026 முதல் அத்தியாவசிய பொருட்கள் (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) ஏற்றிவரும் வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் காலை 0800 மணி முதல் இரவு 900 மணிவரை உதகை நகருக்குள் வர அனுமதி இல்லை.