வண்டலூர் போறீங்களா? மார்ச் 28 வரை சஃபாரி கிடையாது! காரணம் இது தான்..!
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்லும் நிலையில் இங்குள்ள லயன் சஃபாரி மற்றும் மான் சஃபாரி போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தற்போது இந்த இடங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் வரும் மார்ச் 18- ஆம் தேதி முதல் மார்ச் 28- ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு லயன், மான் சஃபாரி சேவைகள் இயங்காது என சுற்றுலாப் பயணிகளுக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 29- ஆம் தேதி அன்று முதல் பிரத்யேக வாகனங்களின் மூலம் லயன், மான் சஃபாரி மேற்கொள்ளலாம். மேற்கண்ட நாட்களில் பூங்காவின் மற்ற பகுதிகளுக்கு சென்று சுற்றுலாப் பயணிகள், விலங்குகள், பறவைகளைப் பார்வையிடலாம் என்று வண்டலூர் பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோடை விடுமுறை தொடங்கவிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் பூங்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையைப் பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் ஒரே ஒரு விலங்கியல் பூங்கா என்றால் அது வண்டலூர் உயிரியல் பூங்கா தான். இது மிகவும் பிரபலமானது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி சிறுவர்கள், சிறுமிகளைக் கவரும் வகையில் யானை, ஒட்டகம், மான்கள், பாம்புகள், வித விதமான கிளிகள், குரங்குகள், கரடிகள் உள்ளிட்டவை உள்ளன.
கடந்த 1985- ஆம் ஆண்டு ஜூலை 24- ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா, இன்று மேம்படுத்தப்பட்டு நல்ல வருவாய் ஈட்டி வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.