கல்விக் கடன் வாங்க போறீங்களா? அப்போ இந்த தகவலை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!
உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "2026-27-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில், மாணவர்களுக்கான கல்வி கட்டணம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி கடன் கிடைக்கிறதா?, அவர்களுடைய பெற்றோர்கள் வங்கிக்கு அலைகழிக்கப்படுகிறார்களா?, வங்கி ஊழியர்கள் பெற்றோர்களை சரியாக ஆலோசிக்கிறார்களா? என்பது முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டோம்.
கடந்த காலங்களில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வந்தது, பல்வேறு நிலைகளிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ரூபாய் வரை தகுதி உள்ளவர்களுக்கு பெற்றோர் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் உத்தரவாத கையெழுத்திட்டால் மட்டுமே கடன் வழங்கப்பட்டது. கடன் உச்ச வரம்பு 7.5 லட்சம் ரூபாயை அதிகப்படுத்த வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, மாணவர்களுக்கான கல்வி கடன் அதிகரிக்கப்படவுள்ளது. மாணவர்களுக்கான கல்விக்கடன் 7.5 லட்சம் என்ற உயர் எல்லை (சீலிங்) அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,02,000 மாணவர்களுக்கு 863 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கடன் 3000 ஆயிரம் கோடியை கடக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளோம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஒவ்வொரு மாவட்டத்திலும் நோடல் வங்கியை தவிர்த்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியரை அறிவித்திருக்கிறோம். அந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டு அறிவார்கள். அவர்கள் மூலமாக தகவல்கள் அறியப்பட்டு, எந்த மாணவனும் கல்விக் கடன் கேட்டு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலை வராமல், இத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கியிருக்கிறார்.
மாணவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும், அதேபோன்று பெற்றோர்களுக்கு வங்கி ஊழியர்கள் மூலம் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த பேராசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.