×

பாஸ்போர்ட் எடுக்கப் போறீங்களா? ஜூலை 1 முதல் கட்டணம் அதிரடி உயர்வு..!

 

பாஸ்போர்ட் விதிமுறைகள் 1980-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாதாரண மற்றும் தக்கல் ஆகிய இரண்டு வகை பாஸ்போர்ட்களை பெற விண்ணப்பிப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பாஸ்போர்ட்டை தக்கல் முறையில் பெற கட்டணம் ரூ.3,500ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.2,000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.1,500 அதிகரிக்கப்பட்டு, ரூ.3,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே தக்கல் முறையில் பெற ரூ.4,000 என கட்டணம் இருந்த நிலையில், தற்போது ரூ.2,000 அதிகரிக்கப்பட்டு, ரூ.6,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்கு பதில் புதிய 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க கட்டணம் ரூ.5,000ஆகவும், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் பெர ரூ.6,000 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் கட்டண விதிமுறைகள் 2026, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய வெளியுறுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1-ம் தேதிக்கு பின்னர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்கள் புதிய விதிமுறைகளின்படி கட்டணம் செலுத்த வேண்டும்.

முன்னதாக, கடந்த ஜூன் 24-ம் தேதி நடைபெற்ற 14-வது பாஸ்போர்ட் சேவை தின நிகழ்ச்சியில் பேசிய வெளியுறுவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர், குடியுரிமைக்கான சான்றாக பாஸ்போர்ட்டை கருத முடியாது, அது ஒரு பயணத்திற்கான ஆவணம் மட்டுமே என்று கூறியிருந்தார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் விவாத பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.