சொந்த வீடு வாங்க போறீங்களா? – ரூ.1 கோடி வரை அள்ளி வழங்கும் கூட்டுறவு வங்கிகள்..!
தமிழ்நாட்டில் நகர மற்றும் புறநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு மேம்பட்ட நிதி உதவிகளை வழங்கும் நோக்கத்துடனும், நகரக் கூட்டுறவு வங்கிகள் (UCB) மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் (UCCS) வழங்கப்படும் வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன்களுக்கான உச்சவரம்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்:
நகரக் கூட்டுறவு வங்கிகளில் சிலவற்றில் தனிநபர் வீட்டுக் கடன்களுக்கான உச்சவரம்பு, இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவைவிடக் குறைவாக இருந்ததும், வங்கிக்கு வங்கி வேறுபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் முழுப் பயனடையும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நடைமுறையில் உள்ள உச்சவரம்புகளின்படி கடன்களை முழுமையாக வழங்கிட நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவுத் துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல, நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் (UCCS)அதிகரித்து வரும் நிதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடன் உச்சவரம்பு சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.100 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகை நிலுவை கொண்ட (Tier 1) சங்கங்களில் தனிநபருக்கான அதிகபட்சக் கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை நிலுவை கொண்ட (Tier 2)சங்கங்களில் தனிநபருக்கான அதிகபட்சக் கடன் உச்சவரம்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் மாதாந்திரத் தவணைச் சுமையைக் குறைக்கும் வகையில், நகரக் கூட்டுறவு வங்கிகள் (UCB) மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள் (UCCS) ஆகிய இரண்டிலும் வீட்டுக் கடன்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன்களுக்கான அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் தங்களது கடன் கொள்கைகள் மற்றும் துணைவிதிகளை உடனடியாக ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு மண்டலத் துணைப் பதிவாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடன் பெற விண்ணப்பிக்கும் உறுப்பினர்களின் கடன் தகுதி மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.
தகுதியுடைய உறுப்பினர்கள் தங்களது அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று மற்றும் நிலம் அல்லது வீடு தொடர்பான ஆவணங்களுடன் தங்கள் பகுதியிலுள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் அல்லது கடன் சங்கங்களை அணுகி இச்சலுகையை பெற்றுப் பயனடையுமாறு கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.