☰
×

809 நாட்கள் தூங்கிவிட்டு இப்போது வருகிறீர்களா? தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்..!!

 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் பகுதியைச் சேர்ந்த ஆர்.புவனேஸ்வரி என்பவர், கடந்த 2023ல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘ஓய்வூதிய பலன்களுக்காக, ஆரம்ப நியமனம் முதல் பணி நிரந்தரம் செய்யப்படும் வரை, அதாவது 1985 ஆக., 8 முதல் 1992 அக்., 15 வரை, பணிபுரிந்த காலத்தையும் கணக்கில் எடுத்து கொள்ளும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, புவனேஸ்வரியின் மனுவை ஏற்று, 2023ம் ஆண்டு நவ., 29ல் உத்தரவு பிறப்பித்தார். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வி துறை செயலர் மேல்முறையீடு செய்தார்.

மனுவில், மேல்முறையீடு மனு, 809 நாட்கள் காலதாமதமாக தாக்கல் செய்ததற்கான காரணங்களை, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விரிவாக விளக்கி இருந்தார்

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தனி நீதிபதி, கடந்த 2023ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, 809 நாட்களுக்கு பின், மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. மேல்முறையீடு கால தாமதத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறிய காரணங்கள், நீதித்துறையை கேலி செய்வதுபோல் உள்ளன.

அதாவது, கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில், அரையாண்டு தேர்வு நடந்ததால், மேல்முறையீடு செய்ய நேரம் கிடைக்கவில்லை. கடந்த 2024ல் புத்தாண்டு, பொங்கல் விடுமுறையால் தாமதம். பின், 10 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகள், ஜூன், ஜூலையில் கணக்கு தணிக்கை, ஆகஸ்டில் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வால் தாமதம்.

கடந்த 2024ம் ஆண்டு மார்ச்சில் லோக்சபா தேர்தல், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம்; 2025ல் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, செய்முறை தேர்வு, பொது தேர்வு, அதன்பின் 2025ம் ஆண்டு அக்டோபரில் கலை திருவிழா, நவம்பர், டிசம்பரில் அரையாண்டு தேர்வு, 2026ம் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, பிப்ரவரியில் செய்முறை தேர்வு என, 809 நாட்கள் காலதாமதத்துக்கு காரணங்கள் விளக்கமாக கூறப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் கல்வித் துறை கூறியிருக்கும் காரணங்கள், நீதித்துறையை கேலி செய்வது போல் உள்ளன. எனவே, இந்த காலதாமதமாக தாக்கலான மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தமிழக அரசுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம், நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும். சம்மந்தப்பட்ட பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து அபராதத்தை வசூலிக்க வேண்டும்.

அரசின் நலனையும், கருவூலத்தையும் பாதுகாக்கும் வகையில், மனுக்களை முறையாக எதிர்த்து வாதிடத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும், தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.