×

SBI கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? அக்டோபர் 1 முதல் உங்கள் ஏடிஎம் கார்டு பயன்பாட்டில் பெரிய மாற்றம்!

 

எஸ்பிஐ வங்கியில் நீங்கள் அடிப்படையான சேமிப்பு வைப்பு கணக்குகளை (BSBD) வைத்திருப்பவர் என்றால், உங்களால் வங்கியில் இருந்து ஒவ்வொரு மாதமும் நான்கு முறை இலவசமாகப் பணம் எடுக்க முடியும். ஆனால், நான்கு முறையை தாண்டி பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி உங்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

இதைவிட இதில் புதைந்திருக்கும் இன்னொரு விஷயம்தான் மிகப்பெரிய ட்விஸ்ட் எனலாம். முதல் நான்கு இலவச பரிவர்த்தனைகளை எஸ்பிஐ வங்கி எவ்வாறு கணக்கிடும் என்பதுதான் முக்கியம்.

இதற்கு முன்னர் வரை எஸ்பிஐ டிஜிட்டல் பரிவர்த்தனையை மாதாந்திர வரம்பில் கணக்கில் எடுக்கவில்லை. வங்கி கிளைகள் அல்லது ஏடிஎம்களில் ரொக்கமாக பணத்தை எடுப்பது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இனி அப்படி இருக்காது.

அக்டோபர் 1 முதல்...

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் பணபரிவர்த்தனையையும், முதல் நான்கு இலவச பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதாவது, நீங்கள் இரண்டு முறை ATM மூலம் பணம் எடுத்துவிட்டு, டிஜிட்டல் மூலம் இரண்டு முறை பணப் பரிமாற்றம் செய்துவிட்டார், நீங்கள் உங்களின் முதல் நான்கு இலவச பணப்பரிமாற்றத்தை பயன்படுத்திவிட்டீர்கள் என அர்த்தம். அடுத்த பணப்பரிமாற்றம் இலவசமாக இருக்காது, உங்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

ரூ.15 + GST

உதாரணத்திற்கு ஒரு மாதத்தில் நீங்கள் ஆறு, ஏழு முறை ATM மற்றும் செயலிகள் மூலம் பணம் எடுத்துவிடுகிறீர்கள் என்றால் பழைய விதிப்படி அவை அனைத்தும் இலவசம்தான். ஆனால், புதிய விதிப்படி, நீங்கள் ஒரு சில பரிவர்த்தனைகளை செய்துவிட்டாலே உங்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.15 + ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.

யார் யாருக்கு இது கிடையாது...?

எஸ்பிஐ-யின் புதிய விதிமுறை, 'Product Code 1011-1701' என்ற தலைப்பின்கீழ் வரும். இது அடிப்படையான சேமிப்பு வைப்பு கணக்குகளின் வங்கிக் கிளை வழியிலான சேவைகளுக்கும் மட்டுமே பொருந்தும். நிதி சாரா பரிவர்த்தனைகள், நிதி பரிமாற்றங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

யார் யாருக்கு பொருந்தும்..?

இந்த புதிய விதிமுறை முழுக்க முழுக்க ரொக்கமாக பணம் எடுப்பதற்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க விரும்பாதவர்கள், முதன்முறையாக வங்கிக் கணக்கு தொடங்குவோர், குறைந்த வருவாய் உள்ள குடும்பங்கள் அல்லது அடிப்படை வங்கிச் சேவைகளை மட்டுமே நம்பியிருப்போருக்காகவே இந்த BSBD கணக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விரைவாக முடிய வாய்ப்பு

அப்பிடியிருக்க வீட்டு வாடகை, மளிகைப் பொருட்களை பெறுதல், அன்றாடத் தேவைகளுக்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுக்கும் இத்தகைய எளிய மக்களுக்கு எஸ்பிஐ விதித்துள்ள இந்த 4 இலவச பரிவர்த்தனைகள் மிக விரைவாகவே நிறைவடையக்கூடும். எஸ்பிஐ ஒரு பெரிய மாற்றமாக கூறவில்லை. இது சேவைக் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் என்பதே எழுத்துப்பூர்வமாக உள்ளது.