☰
×

"வெளிமாநிலத்துல இருந்து வருதா போதைப் பொருள்?" – எழும்பூர் ஸ்டேஷனில் தனிப்படை போலீசார் போட்ட அதிரடி செக்!

 

 சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் 12 காவல் மாவட்டங்களிலும், அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தனிப்படை போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அவற்றைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், போதைப்பொருள் விநியோக வலைப்பின்னலில் தொடர்புடையவர்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்வதுடன் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு போதைப்பொருட்கள் கடத்தி வருவதைத் தடுக்கும் வகையில், ரயில் நிலையங்கள் மற்றும் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 4) காவல் உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில், எழும்பூர் சரக உதவி ஆணையாளர் மற்றும் எஃப்2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், உரிய அனுமதி பெற்று ரயில்வே போலீசாருடன் ஒருங்கிணைந்து சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த பயணிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்தச் சோதனையின் போது மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் உதவியுடன் பயணிகளின் பைகள், பெட்டிகள் உள்ளிட்ட உடைமைகள் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வலைப்பின்னல்களைக் கண்டறிவதற்கும் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.