ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?- அர்ச்சனா பட்நாயக் கருத்து
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது ஜனநாயகம் படத்தை வெளியிட முடியுமா? என்ற கேள்விக்கு ஆணையத்திடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பதில் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கு இடையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக உள்ள ஒருவரின் திரைப்படத்தை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது வெளியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, ஒரு நடிகனாக இருக்கும் வேட்பாளரின் (விஜய்) சினிமாவை (ஜனநாயகன்) வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். இது நல்ல கேள்விதான். ஆனால் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் கேட்டு பதிலளிக்கிறேன் என்று தெரிவித்தார். இதுபோன்ற சம்பவம் முதல்முறை நடக்கிறது என்பதால், இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.