“ஒரு முறை கூட தெய்வச்செயலை காவல்துறை அழைத்து விசாரிக்கவில்லை; வழக்கை சிபிஐக்கு மாற்றுங்கள்”- அரக்கோணம் மாணவி பேட்டி
வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு திமுக முன்னாள் பிரமுகர் மீது புகார் அளித்த அரக்கோணம் மாணவி பேட்டியளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் மீது, கல்லூரி மாணவி ஒருவர் அளித்துள்ள புகார் அதிர்ச்சி அளிக்கிறது. தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், திமுக முக்கியப் பிரமுகர்களுக்கு இரையாக்க முயன்றதாக கூறியதுடன், ஒரு அமைச்சர், அவரது உதவியாளர் பெயரையும் குறிப்பிட்டிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக நிர்வாகி தெய்வசெயல் மீது மாணவி புகார் அளித்தவுடன், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவியின் புகார் ஊடகங்களில் வெளியாகி, அரசியல் கட்சித் தலைவர்களும் பலரும் கண்டனம் தெரிவித்த பிறகே காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பேட்டியளித்த திமுக முன்னாள் பிரமுகர் மீது புகார் அளித்த அரக்கோணம் மாணவி, “ஒரு முறை கூட தெய்வச்செயலை காவல்துறை அழைத்து விசாரிக்கவில்லை. என்னைச் சுற்றி அதிகாரிகள் அமர்ந்து கொண்டு தேவையற்ற கேள்விகளை கேட்டு அலைக்கழித்தார்கள். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதே என் கோரிக்கை. காவல்துறையிடம் நான் கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் ராகுல் என்ற ஐடியில் இருந்து வெளியிட்டு அவமானப்படுத்திவிட்டார்கள்” எனக் கூறினார்.