“த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும், அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை”- ஆ.ராசா
த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும், அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை என திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நீட் தேர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஆ.ராசா, “எல்லாத்துக்கும் ஸ்டாலின் சார் என கூறும் முதல்வருக்கு ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து பேச தைரியம் இருக்கிறதா? இந்தி திணிப்பை ஒப்புகொள்ளமாட்டோம் என ஆளுநர் உரையில் கூறிய நிலையில் CBSE, இந்தி திணிப்பை எதிர்த்து பேச துணிவு உள்ளதா? மீண்டும் தேர்தல் வரக்கூடாது என எங்கள் கூட்டணி எம்.எல்.ஏக்களை அனுப்பினால், அவர்களை அமைச்சராக்கி மார்தட்டுகிறீர்கள். ஆதரவு கட்சியினருக்கு அமைச்சரவையில் பதவி தந்த உங்களுக்கும் வெட்கமில்லை, அமைச்சர் பொறுப்பேற்றவர்களுக்கும் வெட்கமில்லை. இப்படி அரசியல் வெட்கமில்லாத இரு தரப்பு சேர்ந்து ஆட்சி நடத்துவதற்கு நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும். இரவு முழுவதும் மனப்பாடம் செய்து பேப்பரை பார்த்து அப்படியே சட்டமன்றத்தில் படிக்கிறார் முதல்வர். கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றபோது சொன்னாரே தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் இல்லை நாங்கள் மேகதாது அணை கட்டுவோம் என்று.. என்ன செய்தது த.வெ.க அரசு..? ” எனக் கேள்வி எழுப்பினார்.