“நிறைய இசை நிகழ்ச்சிகளில் கூட்டம் அலைமோதுவதற்கு காரணம் இதுதான்”- ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஐ மியூசிக்கை விட, நேரடியாக அனுபவத்தை பெற அதிக மக்கள் வர துவங்கி உள்ளதாகவும், அதனால் தான் பல இசை நிகழ்ச்சிகளில் கூட்டம் அலைமோதுவதாகவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
தனியார் (யமஹா மியூசிக் இந்தியா) நிறுவனம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை விளம்பர தூதராக அறிவித்துள்ளது. யமஹா மியூசிக் இந்தியா நிறுவனம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை விளம்பர தூதரக அறிவிக்கும் நிகழ்ச்சியானது தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வ கையெழுத்திட்டு விளம்பர தூதராக செயல்பட துவங்கினார்.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கலந்துரையாடிய போது பல்வேறு தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக மியூசிக்கிற்கு குணப்படுத்தல் சக்தி உண்டு எனவும் மியூசிக் சமையல் செய்வது போன்று எனவும் மியூசிக் காதுகளுக்கானது, ஆனால் சமையல் வயிற்றுக்கானது என அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சமூக வலைதளங்களில் பல மியூசிக்குகள் ஏ.ஐ ஆக இருக்கலாம், ஆனால் நான் பாடுவது, இசைப்பதை கேட்பது என்பது தனி அனுபவத்தை கொடுக்கும் எனவும் தற்போது இதற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க துவங்கியுள்ளதாகவும், அதனால் தான் நிறைய இசை நிகழ்ச்சிகளில் கூட்டம் அலைமோதுகிறது எனவும் அவர் தெரிவித்தார். அதிகமான மக்கள் நேரடியான மனித அனுபவத்தை அனுபவிக்க நினைப்பதாகவும், நேரடியாக பெறும் அனுபவங்களின் மதிப்பு தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.