“தாம்பரம் டெண்டர் முறைகேட்டில் தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை”- தமிழக அரசு
தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிகழ்வில் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்த அனைத்து நபர்கள் மீதும் எவ்வித பாகுபாடுமின்றி உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிகழ்வில் அறப்போர் இயக்கத்தினால் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களால் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாம்பரம் மாநகராட்சியில் மண்டலம் 4-க்குட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் ரூ.18.60 இலட்சம் மதிப்பீட்டில் நீர் சேமிப்பு சிலை அமைத்து மாநகரம் அழகுபடுத்தல் பணி மற்றும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4-க்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் ரூ.27.30 இலட்சம் மதிப்பீட்டில் அசோகத் தூண் சிலை அமைத்து மாநகரம் அழகுபடுத்துதல் பணி ஆகிய பணிகளுக்கு பொதுநிதி அல்லது CSR மூலம் செயல்படுத்தலாம் என 14.07.2026 அன்று மாமன்றத்தில் பொருள் வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 23.07.2026 அன்று மாநகராட்சி ஆணையரால் மேற்படி பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே 24.07.2026 அன்று ஒரு தனியார் நிறுவனத்தால் மேற்படி 2 பணிகளையும் செயல்படுத்தித் தருவதாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தால் மேற்கண்ட 2 பணிகளும் முடிக்கப்பட்ட போதிலும் 06.08.2026 அன்று ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வு செயல்முறை குறைபாடு என கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் பணியாணை ஏதும் வழங்கப்படவில்லை, மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து செலவினம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், செயல்முறை குறைபாடுகளுக்காக தாம்பரம் மாநகராட்சியின் தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர்தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி ஆணையர், பணியிலிருந்து அரசால் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்நிகழ்வு தொடர்பான விரிவான விசாரணை நடத்துமாறு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அரசால்
உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்த அனைத்து நபர்கள் மீதும் எவ்வித பாகுபாடுமின்றி உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.