×

"ஜெ. மர்ம மரணம்; ஆறுமுகசாமி ஆணையத்தை தடை செய்க” - அப்பல்லோ வாதம்!

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கடந்த ஐந்து வருடமாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என யாருக்குமே எதுவுமே தெரியவில்லை. இதற்காக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு ஏற்படுத்தியது. விசாரணைக்காக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள், நிபுணர்கள் ஆகியோர்  நேரில் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பினார்.

உடனே இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அப்பல்லோ மருத்துவமனை நாடியது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை வரம்புக்குட்பட்டுச் செயல்பட வேண்டும் எனவும் ஆணையிட்டது. அப்பல்லோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து  மருத்துவர்கள் ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது,  அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.ஏ. சுந்தரம் ஆஜராகி வாதாடும்போது, "இயற்கை நீதியின் கொள்கை விதிகளை மீறுவதாகவும், பாரபட்சமாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை செயல்பாடுகள் உள்ளன. விசாரணை ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதில் எந்தத் தயக்கமும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் காட்டவில்லை.  

மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களும் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் சாட்சிகளிடம் நடத்திய விசாரணை முறையும், ஊடகங்களுக்கு விதிகளை மீறும் வகையில் தாமாகவே தகவல்களை அளித்ததும் பாரபட்சமான வகையில் உள்ளது. விசாரணை ஆணையச் சட்டத்தின்படி அதன் செயல்பாடுகள் இல்லை. இதனால் அதன் விசாரணை நடைமுறைகள் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த அமைப்பு ஒரு உண்மை கண்டறியும் குழுதானே தவிர, தீர்ப்பு வழங்கும் குழு அல்ல”  என்றார்.