×

ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

 

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி சட்டவிரோதாமாக இணையதளத்தில் வெளியானது. பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என ஃப்ரீலான்சிங் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யபபட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி, பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறாரே தவிர சினிமா எடிட்டர் இல்லை. இதற்காக யாரிடமும் எந்த தொகையையும் பெறவில்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் என்பவர் தான் இந்த படத்தை நகலெடுத்து, துணிக்கடையில் வேலைபார்க்கும் தனது சகோதரர்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் மனுதாரருக்கு அனுப்பி உள்ளனர். மனுதாரர் தான் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் என தெரிவித்தார். மேலும், 500 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான படத்தில் எடிட்டிங் நேரத்தில் போடப்படும் வாட்டர்மார்க் உள்ளது. இதன்மூலம் எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்துதான் வெளியாகியுள்ளது என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரசாந்த் என்பவர் தனது லேப்டாப்பில் படத்தை திருட்டுத்தனமாக ஏற்றிய பின் மற்ற குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு பகிர்ந்துள்ளார். பின்னர் அந்த முழு படம் கம்பரஸ் செய்யப்பட்டு அவர்கள் மூலம் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது; நாளொன்றுக்கு 500 பேர் விதம் 145 நாட்களுக்கு மேல் வேலைபார்த்த உழைப்பில் உருவான படம் இப்படி வெளியானதால் அவர்களின் உழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது, எனவே மனுதாரரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் துணிக்கடை மேலாளர் உமா சங்கரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.