லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்கம் பறிமுதல்
குமரி மாவட்டம் தோவாளை அருகே அமைந்துள்ள நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூபாய் 58 ஆயிரம் மற்றும் பட்டு புடவைகள் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி அரசு அலுவலகங்களில் சில ஊழியர்கள் தீபாவளி வசூல் செய்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் தோவாளை அருகே பண்டாரபுரம் பகுதியில் அமைந்துள்ள நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் சிவசங்கரி மற்றும் உமா தலைமையிலான குழு அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூபாய் 58 ஆயிரம் மற்றும் பட்டு புடவைகள், தீபாவளி பரிசு பொருட்கள் ஆகியவைகளை லஞ்ச ஒழிப்பு போலிஸார் பறிமுதல் செய்தார்கள்.மேலும் பெண் உட்பட இரண்டு பேரை பிடித்து விசாரனை செய்து வருகிறார்கள்.