☰
×

ஹரிஷ் தற்கொலை வழக்கில் மற்றொரு யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது..!!

 

பிரபல நிதி ஆலோசகரும் யூடியூபருமான ஹரிஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மற்றொரு பிரபல யூடியூபரான ஜேசன் சாமுவேல் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரிஷ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் ஜேசன் சாமுவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரைப் புதுச்சேரியில் வைத்து மடக்கிய போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 26). பிரபல யூடியூபரான இவர் இன்ஸ்டாகிராமில் நிதி முதலீடு மற்றும் சேமிப்பு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், மற்றொரு யூடியூபர் பிரபலமான ஜேசன் சாமுவேலுடன் ஆன்லைனில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹரீஷின் வீடியோக்களை விமர்சித்து அவர் பதிவுகளை வெளியிட்டதாகவும், இதனால் ஹரீஷ் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த கானத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, ஹரீஷின் தந்தை கானத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், மற்றொரு யூடியூபர் தனது மகன் குறித்து அவதூறு பரப்பியதுடன், தொடர்ந்து இணையவழி அச்சுறுத்தல்களிலும் ஈடுபட்டதே அவரது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில், ஹரிஷ் தற்கொலைக்கு காரணமானவராக கூறப்படும் யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வீடியோ வெளியிட்டு ஹரிஷை ஜேசன் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை அளித்த புகாரில் கானத்தூர் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.