×

எடப்பாடி பழனிசாமிக்கு மற்றொரு சிக்கல்

 

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வேட்புமனுவில் சொத்து, வருமான விவரங்களை  மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி,  வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், வேட்புமனுவில், சொத்து, வருமான விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்துள்ளதாகக் கூறி,  தொகுதி வாக்காளர் சக்திவேல் பெருமாள் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்து முழுமையான விவரங்களை தெரிவிக்கவில்லை  என்றும், நிறுவனங்களில் இருந்து அவரது மனைவிக்கு கிடைத்த  வருமானம் குறித்த தகவல்களை  மறைத்துள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு தேர்தலில் இந்து கூட்டுக்குடும்ப சொத்தாக இருந்த 3900 சதுர அடி அளவிலான வீடு, தற்போதைய வேட்புமனுவில் தனது மனைவியின் பெயரில் மாற்றப்பட்டதை மறைத்துள்ளார்; நெடுங்குளம் கிராமத்தில் விவசாய நிலத்தை வாங்கியதற்கான நிதி ஆதாரங்களை  காட்டவில்லை என, மனுவில் குறிப்பிட்டுள்ளார். 2021, 2026ஆம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பீட்டால், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.  உண்மை தகவல்கள்  மறைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு   உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.