பகுதி நேர ஆசிரியர்களுக்கு weightage மதிப்பெண்கள் அறிவிப்பு
பகுதி நேர ஆசிரியர்களுக்கு weightage மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலை வாய்ப்பு பதிவு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். பணி அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 மதிப்பெண் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர்கள் பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக போட்டித் தேர்வுகளில் பகுதிநேர பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படுமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்ததன் படி சிறப்பு மதிப்பெண்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ரூ.5,000/- ஒருங்கிணைந்த மாத சம்பளத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நியமனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், குறிப்பாக 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அரசு உத்தரவில் கூறப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 2010-2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 15,169 பகுதிநேர பயிற்றுனர்கள் வாரத்திற்கு 9 மணி நேரம் (வாரத்திற்கு 3 ½ நாட்கள்) பணிபுரிய முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். திட்டம் முடிந்ததும் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த ஊதியத்தில் உள்ள பகுதிநேர பயிற்றுனர்களில், 11,773 பயிற்றுனர்கள் தற்போது பணியில் உள்ளனர். உடற்கல்வி, கலை தையல்,இசை, கணினி, வாழ்க்கை திறன், கட்டுமானம் மற்றும் தோட்டக்கலை ஆகிய பாட ஆசிரியர்களாக உள்ளனர். இந்த ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வில், எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்களும், நேர்காணலின் அடிப்படையில் மீதமுள்ள 5 மதிப்பெண்களும் என மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. தற்போது, நேர்காணலுக்கான 5 மதிப்பெண்கள் என்ற விதி திருத்தப்பட்டு, "நேர்காணல்" என்ற வார்த்தையை "வேலைவாய்ப்பு பரிவர்த்தனை பதிவு மூப்பு" என்று மாற்றி பணியாற்றும் ஆண்டுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1-3 ஆண்டுகள் பணிபுரிபவார்களுக்கு ஒரு மதிப்பெண்ணும், 3-5ஆண்டுகள் வரை பணிபுரிவோர்களுக்கு 2 மதிப்பெண்களும், 5-10 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு 3 மதிப்பெண்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு 5 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 100 மதிப்பெண்களுக்கு மேல், ஆண்டு அனுபவத்திற்கு 1.5 மதிப்பெண்கள், அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்க அனுமதி அளித்து உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர்கள் (உடற்கல்வி, தையல், வரைதல் மற்றும் இசை) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பைப் பொறுத்தவரை, ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத் தேர்வுகளில் பங்கேற்கும் சமக்ர சிக்ஷாவின் கீழ் பணிபுரியும் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களுக்கு எழுத்துத் தேர்வுகளுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்கள், ஒரு சிறப்பு நிகழ்வாக, 2011 முதல் இன்றுவரை, எந்த இடைவேளையும் இல்லாமல் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்றும், இது அடுத்த 5 ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..