×

அரசுக்கு 48 மணிநேரம் கெடு! இல்லையேல் போராட்டம் வெடிக்கும்- அண்ணாமலை

 

இன்னும் 48 மணி நேரத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு சுமூகமான முடிவு எடுக்கவில்லை என்றால் வருகின்ற 15-ம் தேதி பாஜக போராட்டத்தை பாஜக கையில் எடுக்கும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை  57 வயதாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள்  4ஆவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ரானர். இவர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஆசியர்  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர்  நல சங்கம் சார்பில் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு கூட வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போது நமது கட்சியின் சார்பில் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கைகள் மீது மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று டிபிஐ வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் தேர்தல் வாக்குறுதி 177 ல் கூறியபடி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்குவதாக திமுக ஆட்சி தெரிவித்திருந்தது. இரண்டு வருடங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை.

இன்னும் 48 மணி நேரத்தில் திமுக அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக முடிவை அளிக்க வேண்டும் என மாநில அரசை வேண்டுகிறோம். இல்லையென்றால் அவர்களின் போராட்டத்தில் பாஜக சேரும் நிலை உருவாகும் என்றும் மிகப்பெரிய அளவில் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு தயாராகியுள்ளோம். நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்” என தெரிவித்தார்.