“கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகள் மூடவில்லை”- அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகளை மூடவில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகளை மூடவில்லை. தற்போதும் கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு அருகெ 129 மதுக்கடைகள் தொடர்ந்து இயங்கிவருகின்றன. வீ த லீடர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகேயுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் இருந்த 1 லட்சத்து 6,000 நீர்நிலைகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவற்றை காணவில்லை. சென்னையில் 67% இடங்களில் கட்டுமானம் வந்து விட்டது, 10 சதவீத இடத்தில் தான் பசுமை இருக்கிறது. வரும் 2050ல் கோவை, கன்னியாகுமரியை தவிர, பிற மாவட்டங்களில் குடிக்க கூட தண்ணீர் இருக்காது. ஆகஸ்ட் முழுவதும் மரக்கன்று நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை 'வீ த லீடர்ஸ்' அமைப்பினர் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 49% நீர்நிலைகள் வறண்டு காணாமலே போய்விட்டன. மொத்தமுள்ள 1,16,957-இல் 50,197 நீர்நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. 8,366 நீர்நிலைகள் இருந்த இடங்களை ஆக்கிரமித்து மக்கள் வீடு கட்டி வாழ்கின்றனர். இப்படி இருக்கும்போது நமது எதிர்கால சந்ததியினர் வாழ முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.