×

திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்துப் பட்டியலை இன்று வெளியிட்டார். 

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன்  இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி,  தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். 

அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில், திமுகவின் ஜெகத்ரட்சகனுக்கு சுமார் 50 ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறினார்.

இதேபோல் அமைச்சர்கள் ஏ.வ.வேலுவுக்கு 5,442 கோடி ரூபாய், கே.என்.நேருவுக்கு 2 ஆயிரத்து 495 கோடி ரூபாய், பொன்முடி 581 கோடி ரூபாய், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆயிரம் கோடி ரூபாய், உதயநிதி ஸ்டாலின் சுமார் 2000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக எம்.பிக்கள் கனிமொழிக்கு 830 கோடி ரூபாய் சொத்துக்களூம், கலாநிதி மாறனுக்கு 12 ஆயிரத்து 450 கோடி ரூபாய் சொத்துக்களும், டி.ஆர்.பாலுவுக்கு 10 ஆயிரத்து 840 கோடி ரூபாய் சொத்துக்களும், கதிர் ஆனந்துக்கு 579 கோடி ரூபாய் சொத்துக்களும், கலாநிதி வீராசாமிக்கு 2 ஆயிரத்து 923 கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை தவிர சபரீசனுக்கு 902 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும்,

திமுகவிற்கு ஆயிரத்து 408 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.