×

காவல்துறையால் தேடப்படும் எந்த குற்றவாளிக்கு பாஜகவில் இடமில்லை- அண்ணாமலை

 

தமிழக சட்டம்- ஒழுங்கு துறையை, ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எச்.ராஜாவின் கருத்து தனிப்பட்டது எனவும் சட்டம் ஒழுங்கு துறை மாநில அரசிடமே இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தது தொடர்பாக சென்னை தி,நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழகத்திற்கு பொங்கல் பரிசாக 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இதன்மூலம் 1,450 இடங்கள் நடப்பு ஆண்டிலே கிடைக்க உள்ளது. தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறந்து வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று. தனியார் செய்தி நிறுவனமான இந்தியா டுடே பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக கள ஆய்வு செய்து செய்தி வெளியிட்டதில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் மற்றும் போராட்டங்கள் திட்டமிட்டது அதோடு வெளிநாட்டு சதியும் உள்ளது.

பஞ்சாப் முதல்வருக்கு பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடிகளில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது, அதற்கு அவர் கூறும் பொய்யான காரணங்களே. தமிகத்தின் சட்டம் ஒழுங்கு துறையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என எச்.ராஜா சொல்லிருப்பது அது அவரது தனிப்பட்ட கருத்து. மாநில காவல்துறை எப்போதுமே மாநில அரசிடம் தான் இருக்கவேண்டும், மாநில பிரச்சனைகள் மாநில அரசிற்கே தெரியும் என்றவர், தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது” எனக் கூறினார்.

படப்பை குணா பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்விக்கு காவல்துறையால் தேடப்படும் எந்த குற்றவாளிக்கு பாஜகவில் இடமில்லை என அண்ணாமலை கூறினார்.