×

கால் தேய்ந்தாலும் பரவாயில்லை; கிராமம் கிராமமாக செல்லப்போகிறோம்- அண்ணாமலை

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாள் விழாவில் பாஜக நல்லாட்சி தினமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 5 நபர்களுக்கு விருது வழங்கபட்டது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்தியாவில் கலாச்சார திருட்டு அதிகமாகிவிட்டது.   2014ல் இருந்து 2017 வரை திருடுபோன சிலைகளில்  24 சிலைகள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 200 நாடுகளில் இதே போல் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 மெகா வாட் சோலார் யூனிட் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.. கல்லா கட்டும் வேலையைத் தான் இங்கு உள்ளவர்கள் செய்து வருகின்றனர். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்துக்கு நல்லது என திமுகவினர் புரிந்துகொண்டனர்.

பாஜக இப்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கால் தேய்ந்தாலும் பரவாயில்லை தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லப்போகிறோம்” எனக் கூறினார்.