×

 தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய எழுச்சியாக இருக்கிறது- அண்ணாமலை

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் இவ்வளவு சேதங்கள் ஏற்படுவதற்கு  நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார். தோவளை பகுதியில் வெள்ளத்தால் சேதம் அடைந்த பாலத்தை பார்வையிட்ட அவர் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை நிவராண உதவியாக வழங்கினார். தொடர்ந்து திருப்பதிசாரம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். அவருடன் பாஜக நிர்வாக குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்ஆர் காந்தி, நயினார் நாகேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் இவ்வளவு சேதங்கள் ஏற்படுவதற்கு  நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதான் காரணம். பாரதி ஜனதா கட்சி மழை சேதங்கள் குறித்து விவரங்களைத் திரட்டி  தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும். சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் கேட்டு போராட்டம் அறிவித்துள்ளோம். தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே தமிழகத்தில் பாஜக மிகபெரிய எழுச்சியாக இருக்கிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டு விட்டு தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வெறும் 8000 ரூபாய் மட்டுமே மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. காரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதியில் சென்று பார்வையிடுவதால் மக்கள் பிரச்சினை தெரியாது. அவர்களிடம் பேசவேண்டும். முதலமைச்சர் இன்னும் கூட கடுமையாள உழைக்க வேண்டும்” எனக் கூறினார்.