×

80% டாஸ்மாக்கை மூடுவது எப்படி? அரசுக்கு வெள்ளை அறிக்கை தருகிறோம்- அண்ணாமலை

 

ஆளுநருக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை  உடனடியாக அமைச்சர் பதவிலிருந்து  நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் நாளை தெரிவிக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் விஷச்சாராய விற்பனையின் காரணமாக உயிர் இழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் மாநில அரசுக்கு எதிரான வசனங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் காலி மது பாட்டில்களை கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் டாஸ்மாக்கை வரைமுறைப்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மூன்று வருடத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதன் மூலம் மதுவுக்கு அடிமையானவர்களை நம்மால் காப்பாற்ற முடியும். 10 நாட்களில் பாஜக சார்பில், தமிழகத்தில் 3 வருடங்களில் டாஸ்மாக்குகளை எவ்வாறு குறைப்பது வேறு எந்த மாதிரியான விஷயங்களில் டாஸ்மாக் மூலம் வரக்கூடிய வருமானத்தை ஈட்ட முடியும் என்பது குறித்து முதலமைச்சரிடம்  வெள்ளை அறிக்கையை கொடுக்க உள்ளோம். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி வெள்ளை அறிக்கையை கொடுக்க உள்ளோம். ஆகவே பாஜக அளிக்க உள்ள வெள்ளை அறிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள 80 சதவீத மதுபான கடைகளை மூடலாம்.

திமுகவின் முக்கிய புள்ளிகள் நடத்தும் டாஸ்மாக் நிறுவனம் மூலமாக பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டப்படுகிறாத. அதனால் தான் டாஸ்மாக்கை மூட முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. கேரளா, பீஹார் போன்ற மாநிலங்களில் மதுபான கடைகள் ஒழுங்குபடுத்தபட்டு உள்ளன. கர்நாடகாவில் அரசு நடத்தாமல் தனியார் தான் டாஸ்மாக் நடத்துகிறது. ஆனால் தமிழகத்தில் அரசு டாஸ்மாக்கை ஏற்று நடத்துகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மதுவுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் மதுபான கடையின் மூலம் வருமானம் என்பது 22 விழுக்காடு உயர்ந்துள்ளது. மதுவுக்கு தமிழகத்தில் அடிமையான ஒரு எண்ணிக்கை 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. மதுவுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கள்ளச்சாராயத்தின் விற்பனையும் அதிகரிக்கும்.

2020- ல் மதுபானத்திற்கு அடிமையானவன் எண்ணிக்கை 5% ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனுடைய பாதிப்பு சமூக பாதிப்பாக மாறிவிடும். மது இல்லாத இந்தியா என்பது சாத்தியமே இல்லை. ஏனென்றால் இது ஜனநாயக நாடு. ஆகவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். ஐந்தாயிரத்திற்கும் அதிகமான உள்ள டாஸ்மாக் கடைகளை  ஆயிரத்திற்கும்  கீழாக கொண்டு வர வேண்டும்” என்றார்.