×

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீறுடை, புத்தகங்கள் வழங்காத திமுக அரசு - அண்ணாமலை கண்டனம்

 

கல்வி ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும், தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கான சீருடைகளும், பயிற்சி புத்தகங்களும் இன்னும் வழங்கப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

அங்கன்வாடி பள்ளிகளின் நோக்கமே, பள்ளிக் கல்வி தொடங்கும் முன், குழந்தைகள், முறையான அடிப்படைக் கல்வி பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வரையில், அங்கன்வாடி குழந்தைகள், பயிற்சி புத்தகங்களில் உள்ள, காய்கறிகளின் பெயர்கள், விடுபட்ட எழுத்துக்கள், படம் வரைதல் உள்ளிட்ட பயிற்சிகளில் தேர்ந்திருக்க வேண்டும். ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் பயிற்சி புத்தகங்களே வழங்கப்படாததால், குழந்தைகளுக்கு எந்த அடிப்படைப் பயிற்சியும் கிடைக்கவில்லை. குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தூண்டும் எந்தப் பயிற்சிகளும் வழங்கப்படாததால், இது குழந்தைகளின் கற்றல் திறனையும் பாதிக்கும். 

ஏழை, எளிய பின்புலத்தில் இருந்து வரும் குழந்தைகள், அடிப்படைக் கல்வியும், சிந்தனைத் திறனும் பெற வேண்டும், கல்வியில் சமவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டவை அங்கன்வாடி மையங்கள். இந்த அடிப்படைப் பயிற்சி கிடைக்கவில்லை என்றால், பள்ளிக் கல்வி கற்றலில் குழந்தைகள் பின்தங்கவும் வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.