ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தும் முடிவை கைவிட வேண்டும் - அண்ணாமலை
Nov 20, 2023, 20:00 IST
ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.