×

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு... அண்ணா பல்கலை. கல்லூரிகளுக்கு கடிதம்!

 

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்கான அறிவிக்கை 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்தத் தேர்வுகளில் 156 பேரின் மதிப்பெண்கள் முறைகேடாக உயர்த்திப் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டித் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் விரிவுரையாளர்கள் 1,060 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இச்சூழலில் இந்தத் தேர்வுகள் அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் தேர்வர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும் வகையில் தேர்வு நடத்தப்படவிருந்தது. சென்னையில் இருந்த பல தேர்வர்களுக்குப் விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களைத் தேர்வு மையமாகப் போட்டிருந்தார்கள். இன்னும் சிலருக்கு கன்னியாகுமரியில் தேர்வு மையம் போடப்பட்டிருந்தது. அதேபோல தென் மாவட்டங்களில் இருக்கும் தேர்வர்களுக்கு, வட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் இருந்தன.

இவ்வாறு வெவ்வேறு இடங்களில் மையங்களைப் போடுவதால் தேர்வர்களுக்கு அலைச்சல் ஏற்படும் என்பதால், இதை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் தேர்வர்களும் குரல் கொடுத்தனர். அதற்குப் பின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார். டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தேர்வு வாரியம் கடந்த வாரம் அறிவித்தது. கணினி வழி தேர்வாக 200க்கும் மேற்பட்ட மையங்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற உள்ளது. தற்போது தேர்வு மையத்திற்காக பொறியியல் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.