×

6 மாதங்களில் திமுக ஆட்சி மலரும்- அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் பரபரப்பு

 

6 மாதங்களில் திமுக ஆட்சி மலரும் என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “நாங்கள் கூப்பிடாமலேயே தவெக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வருவர். 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் மீண்டும் சொல்கிறேன், 6 மாதங்களில் திமுக ஆட்சி மலரும். புரிந்தால் புரிந்து கொள்ளட்டும் தவெக எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் எப்போது ஓடலாம் என்று இருக்கிறார்கள். எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழி நடத்திய இயக்கம் அது. அதிமுக தொண்டன் எங்களுக்கு கைக்கொடுப்பான். திராவிட இயக்கங்களை ஒழிக்க முடியாது. என்னை பார்த்து ரவுடி என்கின்றனர். நான் ரவுடிக்கு ரவுடிதான். தொட்டு பார்க்க முடியாது.” என்றார்.

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வரும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவருமான சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் அவர் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ள இவர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார்.