×

5வது கணவருடன் மனைவி ஒன்றாக இருந்ததால் ஆத்திரம்- குண்டு வீசிய 4வது கணவர்

 

நெல்லையில் 5வது கணவருடன் மனைவி ஒன்றாக இருந்ததால் ஆத்திரமடைந்த 4வது கணவர், மனைவி வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.


நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). இவர் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பாக கோவையில் ஒரு தனியார் கடையில் வேலை செய்வதற்காக சென்றிருக்கிறார். அப்பொழுது அங்கே கோவையைச் சேர்ந்த ஆனந்தி (வயது 24). என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனந்திக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளன. இதையடுத்து மூர்த்தி ஓராண்டுகளுக்கு முன்பாக ஆனந்தியை தனது சொந்த ஊரான நெல்லை  மேலப்பாளையத்திற்கு அழைத்து வந்து திருமணம் செய்து  இருவரும் குடும்பம் நடத்தி இருக்கின்றனர். 6 மாதத்திற்கு முன்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்ததாக  கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 24), என்ற வாலிபருடன் ஆனந்திக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனந்தி 4வது கணவரான மூர்த்தியை கைவிட்டு விட்டு 5வதாக செல்வம் என்ற வாலிபரோடு கடந்த 5 மாதமாக வாழ்க்கை பயணத்தை தொடங்கி இருக்கிறார். 


இந்த நேரத்தில் செல்வம் முறையாக ஆனந்தியை கவனிக்காததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்தி நேற்று இரவு இது தொடர்பாக 4வது கணவரான  மூர்த்திக்கு தொலைபேசியில் அழைத்து தனக்கு பிரியாணி மற்றும் மது வாங்கி வருமாறு கூறியிருக்கிறார். முன்னாள் மனைவி ஆனந்தி கேட்டதும் மூர்த்தி ஆசை ஆசையாக பிரியாணி மற்றும் மது பாட்டில்களை நெல்லை மேலப்பாளையம் பி.டி. காலனி பகுதியில் வசிக்கும் ஆனந்தியின் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் ஆனந்தியும் 5வது கணவரான செல்வமும் ஒன்றாக இருந்துள்ளனர். இதை பார்த்த மூர்த்தி ஆத்திரத்தில் தான் வைத்திருந்த மது பாட்டிலை குடித்துவிட்டு சிறிது நேரத்தில் ஆனந்தியின் வீட்டு முன்பாக மண்ணெண்ணெய் குண்டை வீசி சென்றார். இது தொடர்பாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் தற்போது மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நெல்லை மேலப்பாளையத்தில் 5வது கணவருடன் மனைவி ஒன்றாக இருந்ததால் 4வது கணவர் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.