×

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை - 2 காவலர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 

ஆந்திர மாநில இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்த ஆந்திர மாநிலப் பெண்ணை செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் ரோந்து காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் இளம்பெண்ணை கடத்தி திருவண்ணாமலையிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியுள்ளனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சுரேஷராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு காவலர்களையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் இரண்டு காவலர்களையும் நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்பொழுது சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வேலூர் சிறையில் உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளி மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு காவலர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் உள்ள காவலர்கள் சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.