#BREAKING மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- ஆந்திராவில் அலர்ட்
கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆந்திர அரசு சுகாதாரத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் கோவிட்-19 மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் எட்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து, சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடப்பாவின் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர், காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு, வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதேபோல் உடல்நலக் கோளாறுகள் காரணமாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடப்பாவைச் சேர்ந்த 43 வயது நபருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின்னர் கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் தற்போது 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆந்திர அரசு சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், தனி படுக்கை வசதிகளை தயார்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்காக தனி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.