×

“அன்புமணியை கோட்டையில் அமர வைப்போம்! தமிழகத்தை பாமக ஆள வேண்டும்”

 

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தடை விவகாரத்தில் தமிழக அரசு சரியாகவே மேல் முறையீடு செய்துள்ளதாகவும், தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக  நம்பலாம் என்றும் பாமக நிறுவனர்  ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடையே பேசிய நிறுவனர் ராமதாஸ், “கடலூரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடாமல் இருந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் போட்டியிட ஆட்கள் இல்லை சொல்லி இருந்தால் அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து இருப்பேன். கடலூரில் முந்திரி தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கை  தோண்டி எடுத்து தொடர்ந்து போராடி வருகிறோம். மேலும் கொலை வழக்கில் தவறு செய்தவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும். காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மிழ்நாட்டை பட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும், அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு, வீடாக, திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனியாக பாமக போட்டியிட்ட போது வெறும் 23 லட்சம் வாக்குகளை பெற்று இருந்தோம். ஆனால் தற்போது 5.6 % வாக்குகளை பெற்று தமிழகத்தில் 3 வது பெரிய கட்சி என தலைவர் ஜி.கே.மணி சொல்வது வெட்கமாகவும், வேதனையாக உள்ளது.

தொண்டர்களை பார்க்கும்போது எனக்கு உற்சாகம் பிறக்கிறது. எனது பயணம் தொடரும். அலெக்சாண்டரை விட என்னிடம் படை பலம் அதிகமாக உள்ளது. மேலும் அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது தொண்டர்களாகிய உங்கள் கையில் உள்ளது. அன்புமணியை கோட்டையில் அமர வைப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள். யாருக்கு நாம் போராடி இட ஒதுக்கீட்டை பெற்று தந்தோமோ அவர்கள் வன்னியர்களுக்கு 10.5%  இட ஒதுக்கீடு  கொடுக்க கூடாது என வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு மேல் முறையீடு செய்து சரியாகவே செய்கிறது, நல்ல வழக்கறிஞர்களை போட்டு இருக்கிறார். தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக நாம் நம்பலாம்” என தெரிவித்தார்.