×

சாதிவாரி கணக்கெடுப்பு; அரசு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி வேண்டுகோள்!

 

நாட்டில் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளதால் கணக்கெடுப்பு நடத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. இதோடு சேர்ந்து சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் உயர் சாதியினர் தவிர்த்து பல்வேறு சாதியினரும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டன. 

தற்போது வழங்கப்படும் இடஒதுக்கீடு ஒரு சாதிக்கு அதிகமாக இருப்பதாகவும் மற்றொரு சாதிக்கு குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாகவே உள்ளன. ஆகவே அரசே சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீட்டினை பிரித்து வழங்கவேண்டும் என்கின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் ஆந்திர சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூகநீதியை நிலைநாட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. 

இதற்காக மத்திய, மாநில அரசுகளை கடந்த பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.