"ஆன்லைன் சூதாட்டத்தால் 10 மாதங்களில் நடக்கும் 23வது தற்கொலை" - அன்புமணி வேதனை!!
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழப்பவர்கள் மனு உளைச்சலில் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிந்தார். இதன் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரூர் மாவட்டம் தாந்தோனிமலையைச் சேர்ந்த சஞ்சய் என்ற 23வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் தினமும் நடக்கும் நிகழ்வுகளாக மாறி வருகின்றன. சென்னையில் பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாளே கரூர் மாவட்டத்தில் அடுத்த தற்கொலை நிகழ்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 10 மாதங்களில் நடக்கும் 23-ஆவது தற்கொலை இதுவாகும். இது தொடர்கதையாக அனுமதிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.