×

“துணியை ஒட்டுப்போட்டு தைத்தால் தான் சட்டை அழகாக இருக்கும்”- விஜய்க்கு அன்பில் மகேஷ் பதிலடி

 

உடைஞ்ச கிளாஸ ஒட்டவைச்சது மாதிரி, கிழிஞ்ச துணியை தச்சு வச்ச மாதிரி கூட்டணியை திமுக அமைத்துள்ளது. இது ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி என தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், துணியை ஒட்டுப்போட்டு தைத்தால் தான் சட்டை அழகாக இருக்கும், அது தான் திமுக கூட்டணி. எங்களுக்கு அது தான் பலமே என அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திருச்சியில் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “திருச்சி என்றாலே அது திமுகவின் கோட்டை தான். மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் வரும் தேர்தல் இருக்கும். இந்த தேர்தலில் தமிழ்நாடு அணியா டெல்லி அணியா என்பதை நோக்கி தான் எங்கள் கவனம் இருக்கும். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் அவர்களை குறித்து எங்களுக்கு கவலையில்லை. திருச்சி திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்.

தேர்தல் தேதி அறிவித்தால் நாங்கள் எளிதாக பிரச்சாரம் செய்ய அனுமதி வாங்கி விடுவோம் என த.வெ.க வினர் கூறினர். தற்போது அவர்களே மாற்றி பேசுகிறார்கள். தமிழ்நாடு அரசு தற்போது காபந்து அரசு தான். யாராக இருந்தாலும் முறையாக அனுமதி கேட்டால் தான் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும். இதை அவர்கள புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள அவர்கள வரக்கூடிய காலங்களில் கற்று கொள்வார்கள். வெறும் துணி இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை. துணியை ஒட்டுப்போட்டு தைத்தால் தான் சட்டை அழகாக இருக்கும், அது தான் திமுக கூட்டணி. எங்களுக்கு அது தான் பலமே” என்றார்.