×

திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடைபெறும்;ஆனால் பாடங்கள் 55% குறைப்பு- அன்பில் மகேஷ்

 

இந்த ஆண்டு நடைபெறும் அரசு பொதுத்தேர்வு பாடங்கள் 30 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக ஏற்கனவே  குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல அளவிலான பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலமாக கல்வி புகட்ட அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த ஆண்டு நடைபெறும் அரசு பொதுத்தேர்வு பாடங்கள் 30 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக ஏற்கனவே  குறைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடைபெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே தற்போது 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு 10 ஆம் தேதி வரை வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெற்றோருக்கு அச்சம் இருக்க தான் செய்யும். இதை நீடிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.