"மு.க.ஸ்டாலின் பெயரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது"- அன்பரசன்
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2வது அலகுக்கான அடிக்கல் கல்வெட்டில்முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசன், “ஸ்டாலின் பெயர் உள்ள நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட கல்வெட்டு ஒரு வாரத்துக்குள் சீர் செய்யப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். ஒரே வாரத்தில் சீரமைக்காவிடில் போராட்டம் வெடிக்கும். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களின் கல்வெட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தவெக தொடர்கிறது. சில்லறைத்தனமான நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபடுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது. ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு பதில் நல்ல திட்டங்களை தவெக அரசு கொண்டு வர வேண்டும்” என்றார்.