ஆம்ஸ்ட்ராங் இடத்தில் ஆனந்தன்! கட்சி தலைமையின் அதிரடி அறிவிப்பு
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 11 பேரையும் போலீஸ் காவலில் விசாரித்த போது திருவேங்கடம் என்பவர் தப்பிச்சென்ற நிலையில் அவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவல் முடிந்து பத்து பேரை நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்த நிலையில் இந்த சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மேலும் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக அஞ்சலை மற்றும் செந்தில் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்து தலைமை அறிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.