☰
×

கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த பழமையான கட்டடம்...குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி..!!

 

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 6 முதல் 7 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், இன்று காலை 10.13 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்ததாகத் தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 6 முதல் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இது குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சமீப மாதங்களாகக் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கியிருந்த ஐந்து மாடி விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, பழைய டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் நவம்பர் 5-ஆம் தேதி கட்டுமானப் பணியில் இருந்த மூன்று மாடிக் கட்டடம் இடிந்ததில் 6 பேர் பலியாகினர். மேலும், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி பஹர்கஞ்ச் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், தற்போது விவேக் விஹார் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.