☰
×

திருவண்ணாமலை கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 8 வயது ஆண் யானை..!!

 

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ருக்கு என்ற பெண் யானை இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிச னம் செய்ய செல்வதற்கு முன்பு யானை ருக்குவிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். மேலும் கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விழாக்காலங்களில் அருணாசலேஸ்வரர் பல்வேறு வாக னங்களில் வீதியுலா செல்லும் போது உற்சவங்களுக்கு முன்பு யானை ருக்கு கம்பீரமாக மாட வீதிகளில் வலம் வருவதும் வழக்கம்.

மகா தீப விழாவின் போது தீப கொப்பரையை யானை ருக்கு ஆசீர்வதித்த பிறகு தான் 2,668 அடி மலை உச்சிக்கு தூக்கி சென்று மகா தீபம் ஏற்றுவார்கள். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி கோவில் வளாகத்தில் யானை ருக்கு இறந்தது. பின்னர் கோவில் அருகிலேயே ருக்குவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 7 வயதில் அருணாச லேஸ்வரர் கோவிலுக்கு வந்த யானை ருக்கு சுமார் 23 ஆண்டுகள் ஆன்மிக பணியை சிறப்பாக செய்தது. தனது 30-வது வயதில் ருக்கு மரணம் அடைந்தது.

ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சிவத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மீண்டும் யானை கொண்டு வர வேண்டும் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

யானை ருக்கு இறந்து சுமார் 8 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி யளவில் ஆண் குட்டி யானை கொண்டு வரப்பட்டது.

அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் ஏற்றி கொண்டு யானை நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. 8 வயதுடைய இதன் பெயர் ஹீராலால் ஆகும். இந்த யானை 6 அடி உயரம் கொண்டது.