×

காயங்களுடன் தூங்க சென்ற அமுதன், தலையில் ரத்தக்கசிவு... அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை

 

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர் இளவரசன் (18) என்பவரையும் அவரது நண்பர்களையும் தாக்கி, செல்போனைப் பறித்துச் சென்றது. இது குறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்தச் சம்பவத்தில் அமுதன் (19) என்ற மாணவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதிகாலையில் நடைபெற்ற முந்தைய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தொடர்புடைய சிலர், அமுதனை அச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் என அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காலை 8.30 மணியளவில் அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) ஆகிய இருவரையும் மலுமிச்சம்பட்டி அருகே ஒரு கும்பல் வழிமறித்தது. அதிகாலை சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், இருவரையும் அருகில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான அமுதன் காலை 10 மணியளவில் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அமுதனின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாணவர் அமுதன் தலையில் ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்தார். 10ம் தேதி காலை அமுதன், அவரது நண்பரை சீனியர் மாணவர்கள் தாக்கியுள்ளனர். அன்று உடலில் காயங்களுடன் தூங்க சென்ற அமுதன், தலையில் ஏற்பட்ட காயத்தில் ரத்தக்கசிவு காரணமாக மூச்சு திணறி பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.