அமோனியா வாயு கசிவு - பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21 ஆம் தேதி அம்மோனியா வாயு கசிந்தது. இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 13
வடமாநில பெண் தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று மாலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜார்க்கண்டை சேர்ந்த பெண் மரணமடைந்தார். இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் கோமா நிலையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவத்தில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தொழிலாளர்களை
வேலைக்கு அழைத்து வந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.