×

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு மத்திய அரசு  உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - டிடிவி தினகரன் ட்வீட்!!

 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் நார்த்தாமலை சரகத்தில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த 30ஆம் தேதியன்று துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வந்தது.  இப்பயிற்சியின் போது நார்த்தாமலை அருகில் உள்ள கொத்தமங்கலம் பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த போது,  அச்சிறுவனின் தலையின் இடது பக்கத்தில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது.  

இதனால் படுகாயம் அடைந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில்  மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இருப்பினும் சிறுவன் புகழேந்தி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 


இந்நிலையில் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில், "புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் (CISF) துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டடிபட்ட சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. சிறுவனை இழந்து வாடும் பெற்றோருக்கும்  குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக்கொள்கிறேன். இனி ஒரு சம்பவம் இப்படி அங்கே நடக்காதவாறு உரிய ஏற்பாடுகளை  உடனடியாக செய்திடவேண்டும். அதோடு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு மத்திய அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.