"திடீர் இட்லி திடீர் சாம்பார் போல் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை"- டிடிவி தினகரன்
திடீர் இட்லி திடீர் சாம்பார் போல் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து கூறியுள்ளார்.
சசிகலா புதிய கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “திடீர் இட்லி திடீர் சாம்பார் போல் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நெல்மணிகள் தோட்டத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பதர்களால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. காக்கா, குருவிகள் நெல்மணிகளை சிலவற்றைக் கொத்தி செல்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 35 ஆண்டுகளாக எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு சிலரின் உண்மை சுயரூபம் இப்போது தமிழக மக்களுக்கு தெரியவந்துகொண்டு இருக்கிறது. NDA கூட்டணியில் அதிமுகவினர் 99.9 சதவீதம் உள்ளனர். யாரோ ஒரு சிலர் ஒதுங்கி இருப்பதால் ஒன்றும் நடக்காது. சீப்பை ஒளித்து வைப்பதால் கல்யாணம் நிற்காது
அமெரிக்கா, ரஷ்யா போல் இந்தியாவை வல்லரசாக்கவே மோடி உழைத்து வருகிறார். பாஜக மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பு தருகிறது. அமைச்சரவையில் இடம் தந்து அழகு பார்க்கிறது. மோடி பிரதமரான பிறகு எங்காவது சட்ட ஒழுங்கு பிரச்னை, சிறுபான்மையின மக்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா? தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி ஜெயித்தால் அது பாஜக ஆட்சி என்று பூச்சாண்டி காட்டுகிறார் முதல்வர். பாஜக ஆட்சி வந்தால் நல்லதுதானே. பிரிந்துள்ளவர்கள், தனித்துவிடப்பட்டவர்கள் தேஜ கூட்டணியில் இணைய வேண்டும்” என்றார்.