"பாஜக ஆட்சியில் மெட்ரோ வரும் என்பது தமிழகத்தை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் செயல்"- தினகரன்
பாஜக கூட்டணி ஆட்சியில் மெட்ரோ வரும் என்பது தமிழகத்தை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் செயல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஈபிஎஸ் ஆட்சிமைந்தால் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும் என பேசுவது கண்டனத்துக்குரியது. மெட்ரோ ரயில் என்பது மக்களின் கோரிக்கை. பாஜக கூட்டணி ஆட்சியில் மெட்ரோ வரும் எனக் கூறுவது தமிழகத்தை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் செயல். மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயிலை அறிவிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் கொண்டு வருவதை அரசாங்கம் செய்யவில்லை என்றால் தவறாக போய்விடும் அது சரியாக தான் நடந்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ளது. மத்திய அரசாங்கம் மனது வைத்து விவசாயிகள் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநிலங்களில் எந்த அரசாங்கம் இருப்பதை தாண்டி விவசாய நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் உயர்த்த வேண்டும் இது விவசாயிகளின் கோரிக்கை. இது திமுக கோரிக்கை இல்லை. தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கவழக்கம் மதுவை தாண்டி கொலை கொள்ளைகள் அதிகரித்து வருகிறது இது தமிழ்நாடு அரசாங்கம் காவல்துறை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இன்னும் தீவிரமாக செயல்படவில்லை என்றால் தேர்தலில் எதிரொலிக்கும். திமுகவினருக்கு தமிழக வெற்றி கழகம் என்றால் ஒரு உறுத்தல் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. 2026 மே மாதம் யார் வெற்றி பெறுவார்கள் என் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் இது எல்லோருடைய கருத்து. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெறும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் கூட்டணியாக இருக்கும்” என்றார்.